தமிழகம்

திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம்: அலுவலக ஊழியர்கள் மீது சந்தேகம்

செய்திப்பிரிவு

திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் காணாமல்போனது நேற்று முன்தினம் தெரியவந்தது.

நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கடத்தல்காரர்களிடமிருந்து சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்படும் தங்கம், திருச்சியில் உள்ள கலால் மற்றும் சுங்கத் துறை அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். வழக்கு விசாரணை முடியும்வரை பாதுகாப்புப் பெட்டகத்திலேயே தங்கம் வைக்கப்பட்டிருக்கும்.

கடந்த மாதம் காரில் கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கக் கட்டிகளை திருவாரூரில் சுங்கத் துறையினர் கைப்பற்றினர். இவை திருச்சி அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப் பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கட்டிகளை சுங்கத் துறை ஆய்வாளர் சரிபார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாது காப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உயரதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

மாஸ்டர் கீ மூலம் திறப்பு?

சுங்கத் துறை ஆணையர் உள்ளிட்டோர் வந்து பார்த்தபோது, 3.5 கிலோ தங்கக் கட்டிகள் மட்டுமே இருந்ததும், 15 கிலோ தங்கக் கட்டிகள் காணாமல்போனதும் தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3.5 கோடி. பாதுகாப்புப் பெட்டகத்தின் ‘மாஸ்டர் கீயை’ பயன்படுத்தி பெட்டகத்தைத் திறந்து, அதிலிருந்த தங்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடேஸ்வரலு, திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாநகர காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களைப் பதிவு செய்தனர். பாதுகாப்புப் பெட்டகம் அமைந்துள்ள அறையின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் எடுத்துச்சென்றனர்.

சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடஸ்வரலுவை தொடர்பு கொண்டபோது, “பயப்படும் அளவுக்கு பெரிய நிகழ்வு எதுவும் நடக்கவில்லை” என்றார்.

அலுவலர்களுக்கு தொடர்பு?

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட திருச்சி சுங்கத் துறை அலுவலக வளாகத்தில் வெளியாட்கள் யாரும் எளிதில் நுழைய முடியாது.

மேலும், பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். எனவே, அறையின் கதவும், பெட்டகமும் உடைக்கப்படாமல், மாஸ்டர் கீ மூலம் திறக்கப்பட்டுள்ளதால், சுங்கத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT