டெல்லியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை பாஜக செய்ததால் தாங்கள் அக்குழுவில் இடம்பெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் உட்பட தமிழகத்தின் முக்கியப் பிரச்சி னைகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெறவில்லை.
இதுகுறித்து இக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ‘தி இந்து’விடம் கூறும்போது, “பிரதமரை சந்திக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் குழுவில் கலந்துகொள்ளும்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் எங்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு நானும் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரியும் அக்குழுவில் கலந்துகொள்வதாக இருந் தோம். இதற்கான விமானப் பயணச் சீட்டுக்களையும் வாங்கி விட்டோம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பிரதமருடன் தமிழக தலைவர்கள் சந்திப்புக்கு விஜய்காந்த் மூலமாக தங்கள் கட்சி ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த எங்களுக்கு பாஜக செய்த ஏற்பாடுகளால் ஆன சந்திப்பில் இடம்பெற மனம் ஒப்பவில்லை. இதனால், எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவினருடன் கூடிப் பேசியபோது இந்த கருத்துக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
இதனால், கடைசி நேரத்தில் எங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. இதை உடனே அறிவிக்கும் பட்சத்தில் அக்குழுவில் இடம் பெறுபவர்களில் மேலும் சிலர் தங்கள் பயணத்தை ரத்துசெய்ய வாய்ப்பாகி விடும், மேலும் அதற்கு நாம் பொறுப்பாக வேண்டாம் எனக் கருதி மௌனமாக இருந்து விட்டோம்” என்றார்.