சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று வாபஸ் பெறப்பட்டது. ஊழியர்கள் சங்கங்களுடன் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் வளர்மதி, தலைமை செயலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.சொர்ணம் கூறியதாவது:
தமிழகத்தில் பணியாற்றும் 80 ஆயிரம் சத்துணவு பணியாளர்களை முழுநேர அரசு பணியாளராக்க வேண்டும், அதற்கு ஏற்ற ஊதிய வழங்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட 34 கோரிக்கைளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தோம்.
இந்நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டுளோம். அமைச்சர் வளர்மதியுடன் தலைமை செயலகத்தில் நாளை எங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.