ரயில் நிலையங்கள், ரயில்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரயில் நிலையங்களில் பாது காப்பை பலப்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் அமைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொள்ளை மற்றும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன சில நாட்களுக்கு முன் மதுரை ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்குச் செல்ல தாயுடன் காத்திருந்த மனநலம் பாதித்த இளம் பெண்ணுக்கு போதை மருந்து கலந்த டீயைக் குடிக்க கொடுத்து, சமூக விரோதி கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
தர்மபுரியில் ஓடும் ரயிலில் ஏப். 27-ம் தேதி பயணிகளிடம் 17 பவுன் தங்க நகை, மே 2-ம் தேதி சேலம் சங்ககிரியில் ஓடும் ரயிலில் 10 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே 1-ம் தேதி குண்டு வெடித்ததில், பெண் மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் பாதுகாப்பு இல்லாததற்குச் சான்றாகும்.
ரயிலில் பெண்களுக்கு போதை கலந்த உணவை கொடுத்து பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றைத் தடுக்க, அனைத்து ரயில்களிலும் அனுமதி பெறாத நபர்கள் உணவுப் பொருள் விற்பனை செய்வதைத் தடை செய்யவும், ரயில்வே பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணியவும், பயணிகளின் பாதுகாப்புக்காக பெட்டிகளில் அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்களை நியமிக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், ரயில் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சி.சி. கேமரா பொருத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், ரயில் நிலையங்கள், ரயில்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.கருப்பையா, வி.எஸ்.ரவி ஆகியோர்கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க, மத்திய உள்துறை செயலர், ரயில்வே துறை செயலர், ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படை டிஜிபி, தமிழக உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.