தமிழகம்

கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் 2-ம் கட்ட ஆய்வு: ஓரிரு நாளில் தொடங்க திட்டம்

செய்திப்பிரிவு

கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதுகாப்பு தொடர்பான 2-ம் கட்ட ஆய்வை ஓரிரு நாட்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது பாதையில் கோயம் பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஓராண் டுக்கும் மேலாக பல்வேறுகட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. இதையடுத்து, கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதுகாப்பு தொடர்பாக முதல்கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த 6-ம் தேதி நடந்தன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் மற்றும் துணை ஆணையர்கள் 2 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, மெட்ரோ ரயில் பெட்டியில் உள்ள தானியங்கி கதவு செயல்படும் விதம், சிக்னல்களின் செயல்பாடுகள், ரயில்களின் இயக்கம், வேக அளவு, தானியங்கி பிரேக் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வு தொடர்பாக 5 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அடுத்தகட்ட ஆய்வு குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘முதல்கட்ட ஆய்வில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளதாக கருதுகிறோம். எனவே, 2-வது கட்ட ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் குழுவினர் ஓரிரு நாட்களில் அல்லது இந்த வார இறுதிக்குள் நடத்தவுள்ளனர். இதற்காக நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். இந்த ஆய்வின்போது, மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், பயணிகளின் வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT