கேரள மாநிலம் மூணாறில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டது.
தெற்கத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை காலத்தில் உள்நாட்டு பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
மலர் கண்காட்சி
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்டு இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காக கேரள மின்வாரியத்தின் உதவியுடன் அந்த மாநில ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் மூணாறில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். கண்காட்சி கடந்த 25-ம் தேதி தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மலர் கண்காட்சியில் வண்ணமயமான பூக்கள் அடங்கிய தோட்டங்கள், செடி, கொடி, புற்களால் உருவாக்கப்பட்ட யானை மற்றும் கணவர், மனைவி, குழந்தை உள்ள குடும்பம் என்பன உள்ளிட்ட பல்வேறு உருவ மாதிரிகள் சுற்றுலாப் பயணி களை வெகுவாகக் கவர்ந்துள் ளன.
அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மூணாறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்த காரணத்தினால் சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல், விடுதி உரிமையாளர் நிர்வாகத்தினர் கவலை அடைந் துள்ளனர்.