தமிழகம்

தக்காளி விலை திடீர் உயர்வு: கிலோ ரூ.25-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

சென்னையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.25 - க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் பலமநேரி, புங்கனூர், மதனபள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் சீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார், ஒட்டிப்பள்ளி, ஹாசன் ஆகிய பகுதிகளில் இருந்தும் தக்காளி வரவழைக்கப்படுகிறது. நாள்தோறும் 80 லோடுகளில் தக்காளி வரத்து இருக்கும். கடந்த மாதம் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.10-க்கும், சில்லறை மார்க்கெட்களில் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தக்காளி விலை, நேற்று திடீரென இரட்டிப்பானது. தற்போது கோயம்பேடு மார்க்கெட், பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.22-க்கும், சில்லறை மார்க்கெட்களில் ரூ.25-க்கும் தக்காளி விற்கப்படுகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறும்போது, “தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் வறட்சி ஏற்பட்டு தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கான வரத்தும் பாதியாக குறைந்துள்ளது. எனவே தக்காளியின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT