2ஜி விவகாரம் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதிலளித்துப் பேசினார். அப் போது ‘‘தலைமை நிதி கணக்காயர் அறிக்கை தொடர் பாக திமுக உறுப்பினர் துரை முருகன் குறிப்பிட்டிருந்தார். ஒரு தலைப்பிலிருந்து வேறொரு தலைப்புக்கு நிதி ஒதுக்கத்தை மாற்றம் செய்வது பெரிய குற்றம் இல்லை. முறைகேடு செய்வதுதான் குற்றம். நாட் டுக்கு வரவேண்டிய பணத்தை வரவிடாமல் உள்நோக்கத்துக் காக தனியார் பயன்பெறும் வகை யில் நடவடிக்கை எடுப்பது தேசிய சொத்தை முறைகேடு செய்வது போன்றது. அந்த வகையில் மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. திமுக வினரின் இந்த செயல்தான் மாபாதகச் செயல்’’ என்று கூறினார்.
அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் எழுந்து, முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ‘வழக்கு நீதி மன்றத்தில் உள்ள நிலையில், அதுகுறித்து பேசக் கூடாது. முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என பேரவைத் தலைவரிடம் முறையிட்டனர்.
அதற்கு முதல்வர் பன்னீர்செல்வம், ‘‘நான் வழக்கின் உள்ளே செல்லவில்லை. என் பேச்சை முழுமையாக கேளுங்கள்’’ என்றார்.
ஆனால், முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். அவர்களது கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து திமுகவினர் அனை வரும் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், ‘‘தணிக்கைத் துறை அறிக்கையில் முறைகேடு நடந்ததாக குறிப்பிட்டிருந்தால், அதுகுறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
எனவே, தமிழக அரசு நாட்டுக்கோ, தேசத்துக்கோ எந்த இழப்பையும் ஏற்படுத்தவில்லை” என்றார்.