தமிழகம்

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி போராட்டம்: அன்புமணி ராமதாஸ் முடிவு

செய்திப்பிரிவு

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் உதகையில் போராட்டம் நடத்தப்படும் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கட்சியினரை சந்திக்க உதகை வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியது: நீலகிரியில் 70 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் விலை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தியும், குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. நெல், கோதுமை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்வதுபோல, தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி உதகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதைக் கண்டித்து, பாமகவை தவிர வேறு எந்தக் கட்சியும் போராடுவதில்லை. எதிர்க்கட்சிகள் செயலற்றுவிட்டன; பாமகதான் எதிர்க்கட்சியாகச் செயல் படுகிறது.

தமிழகத்தில் மது மற்றும் ஊழல் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. மதுவால் சுகாதார, பொருளாதார, சமூக மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. பூரண மதுவிலக்கை கொண்டு வருவதே பாமகவின் இலக்கு. அதேசமயம், கள் இல்லாத பதநீரை இறக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிப்போம் என்றார்.

SCROLL FOR NEXT