தமிழகம்

யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக சுற்றுலா விடுதி அமைக்க தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக சுற்றுலா விடுதிகளை அமைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

இது தொடர்பாக ஊட்டியைச் சேர்ந்த எஸ்.ஜெயச்சந்திரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கோடைகாலம் மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கிழக்கு, மேற்கு மலைத்தொடர் பகுதிகளுக்கு இடையே யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வனப்பகுதியில் இப்போது கடும் வறட்சி காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யானைகள் பெரிதும் சிரமப்படுகின்றன. இந்நிலையில், யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்து காரணமாக யானைகளுக்கு மேலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அண்மையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 8 வயது ஆண் யானை உயிரிழந்தது.

இதனால், யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுற்றுலா விடுதிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக சுற்றுலா விடுதிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. “யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும்படி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, இதுதொடர்பாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT