பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆசிரியர் பணியில் சேரும் வகையில் அவர்களுக்கு தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது.
ஏற்கெனவே, பார்வையற்ற பிஎட் பட்டதாரிகளுக்கு இத்தகைய சிறப்பு பயிற்சியை இந்நிறுவனம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:
பி.எட். முடித்த பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 40 நாட்கள் இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளோம். எஸ்டி வகுப்பைச் சேர்ந்த பிஎட் பட்டதாரிகள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) தங்கள் பெயரை ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த இலவசப் பயிற்சிக்கு இதுவரை 200 பேர் பதிவுசெய்துள்ளனர். பயிற்சி வகுப்புகள் “டயட்” நிறுவனத்தில் நடைபெறும்.
இவ்வாறு ராமேஸ்வரமுருகன் கூறினார்.