தமிழகம்

ஆந்திர போலீஸ் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பலியான 12 தமிழர்களுக்கு தமிழக அரசும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஆந்திர வனப்பகுதியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையயும் அளிக்கிறது. என்ன சூழ்நிலை இருந்தாலும் இப்படி காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

செம்மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டப்படி தண்டனை பெற்று தருவதுதான் காவல்துறையின் கடமையாகும். அதை விடுத்து தற்காப்புக்காகதான் அவர்களைச் சுட்டுக்கொன்றாதாக காரணம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

20 பேரை சுட்டுகொன்ற ஆந்திர காவல்துறையின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சம்பவம் குறித்து நடந்த உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆந்திர மாநில அரசுக்கு இருக்கிறது,

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தினாலும், வறுமையினாலும்தான் தொழிலாளர்கள் இதுபோன்று அண்டை மாநிலங்களுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே இறந்த 20 தொழிலாளர் குடும்பத்திற்கும் ஆந்திர அரசின் இழப்பீடோடு, தமிழக அரசும் இச்சம்பவத்தில் இறந்த 12 தமிழக தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்'' என விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT