தமிழகம்

வங்கி அதிகாரிகள்போல பேசி பல லட்ச ரூபாய் மோசடி: டெல்லி கும்பல் சென்னையில் கைவரிசை

செய்திப்பிரிவு

சென்னை அம்பத்தூர் ஐசிஐசிஐ வங்கி மேலாளர் பிரகாஷ் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “வங்கி வாடிக்கையாளர்கள் 42 பேரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் எண்கள், சிவிவி எண், காலாவதி தேதி, ஒன் டைம் பாஸ்வேர்டு(ஓடிபி) ஆகியவற்றை பெற்று, அவர்கள் கணக்கில் இருந்து பல லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டனர். மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து போலீ ஸார் கூறும்போது, "செல்போன் நிறுவனங்களும் இப்போது வங்கி போல செயல்பட்டு வருகின்றன. ஏர்டெல் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் ‘ஏர்டெல் மணி' என்ற கணக்கை தொடங்கி அதில் ரூ.2 லட்சம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். இந்த பணத்தை வைத்து செல்போன் ரீசார்ஜ் செய்வது, மின் கட்டணம் செலுத்துவது, இன்சூரன்ஸ் தொகை கட்டுவது, ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என பல தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி கணக்கு வைத்திருப் பவர்களின் பணத்தைதான் தற் போது மோசடி செய்துள்ளனர். பணம் வைத்திருப்பவர்களின் விவ ரங்களை கண்டுபிடித்து, அவர் களிடம் வங்கி அதிகாரிகள்போல போனில் பேசி, அதன் ரகசிய எண்களை பெற்று, தங்களது ‘ஏர்டெல் மணி’ கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளனர். இந்த பணத்தின் மூலம் செல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட் களை வாங்கியுள்ளனர். மீதமிருந்த பணத்தை தங்களது வங்கி கணக் குக்கு மாற்றி செலவு செய்துள்ளனர்.

மோசடி நபர்கள் தங்களது ‘ஏர் டெல் மணி’ கணக்குக்கு பணத்தை மாற்றியதன் மூலம் அவர்களின் செல் போன் எண்கள் மற்றும் ஐபி முகவரி களை எளிதாக பெற முடிந்தது. 42 பேரின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம், இருவரின் ‘ஏர்டெல் மணி’ கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த 2 செல்போன் எண்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவை போலியான முகவரி சான்று கொடுத்து பெறப்பட்ட சிம் கார்டுகள் என்பது தெரிந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையில், புதுடெல்லி உத்தம் நகர் ஹாஸ்ட்சல் சாலையில் சிவசக்தி டெலிகாம் என்ற பெயரில் சிம் கார்டு விற்பனை செய்யும் கடை வைத்திருக்கும் தீபக்குமார்(33), பிரவீன்குமார்(32) ஆகியோர்தான் சிம் கார்டை விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், போலியான முகவரி சான்றுகளை ஏற்பாடு செய்து கொடுத்ததே இவர்கள் இருவரும்தான் என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்தோம்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையில், 42 பேரின் பணத்தை மோசடி செய்தது புதுடெல்லியை சேர்ந்த அஸ்ரப் அலி, சன்னி என்பது தெரிந்தது. போலீஸ் தேடுவதை அறிந்து இருவரும் தங்களது கூட் டாளிகளுடன் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் டெல்லியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தீப்குமார், பிரவீன்குமார் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்

SCROLL FOR NEXT