தமிழகம்

தொழிலாளர் நலனில் நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

செய்திப்பிரிவு

தொழிலாளர்களுடைய நலனில் நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் கூறியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சார்பாக தொழிலாளர் நலச்சட்ட மறுசீராய்வு மற்றும் தொழிற்சாலை வளர்ச்சி குறித்த மூன்று நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சி தொழிற்சாலைகளை சார்ந்துதான் உள்ளது. விவசாயம், சேவை மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. அவற்றில் குறிப்பாக சேவைத்துறை அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. இந்த துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருவது முக்கியம்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் மூலமாக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முடியும் . தொழிலாளர்களுடைய நலனில் நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தெற்காசிய இணை இயக்குநர் பானுட பூபாலா கூறும்போது, ‘‘உலகளவில் ஆசியாவில்தான் அதிக தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்திய நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு பிரத்தியேகமாக சவால்கள் உள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலன் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு குறைந்த எண்ணிக்கையில்தான் நடைபெறுகிறது. அதேபோல் பாலின பாகுபாடும் இங்கு உள்ள தொழிற்சாலைகளில் உள்ளது” என்றார்.

இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வணங்காமுடி, பதிவாளர் சவுந்தர பாண்டியன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT