கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளிக் காற்று மற்றும் கனமழையால் 400 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளியில் 10 செ.மீ மழை பதிவானது. கனமழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்றினால் பல இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் பாதைகளும் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சாமல்பட்டி, காவேரிப்பட்டணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சுமார் 400 மின் கம்பங்களுக்கு மேல் சேதமடைந்து மின் மாற்றிகள் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சின்னதம்பி கூறியதாவது:
போகனப்பள்ளி கிராமத்தின் அருகில் உயர் அழுத்த மின் பாதையில் 15 மின் கம்பங்களும், தாழ்வழுத்த மின் பாதையில் 23 மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போகனப்பள்ளி துணை மின் நிலையம், மகாராஜகடை, ஒரப்பம் மற்றும் காவேரிப்பட்டணம் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் மின் வாரிய ஊழியர்கள் இரவு பகலாக செய்து வருகின் றனர். பெரும்பாலானப் பகுதி களுக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பணிகளும் விரைவில் செய்து முடிக்கப்படும். எனவே பொதுமக்கள் இச்சீரமைப்பு பணி முடியும் வரை மின் வாரியத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.