விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி 4 பச்சிளம் குழந்தைகள் இறந்தன. மறுநாள் 16-ம் தேதி மேலும் மூன்று குழந்தைகள் இறந்தன. இதையடுத்து விழுப்புரம் ஆட்சியர் சம்பத் ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் குமுதா தலைமை யிலான மருத்துவக் குழுவினர் பச்சிளம் குழந்தைகள் பிரிவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் அருகே திருநாவ லூரைச் சேர்ந்த கமலக்கண்ணன், கலைத் தென்றல் தம்பதியினரின் பெண் குழந்தை உயிரிழந்தது. இதுதொடர்பாக கமலக் கண்ணணை கேட்டபோது, கடந்த 4-ம் தேதி திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அழாமல் இருந்ததால் விழுப்புரம் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த என் குழந்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இறந்தது. தீவிர சிகிச்சை பிரிவு என கூறுகின்றனர். ஆனால் அங்கு கொசு, ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. உள்ளே மின் விசிறி உட்பட அத்தியாவசிய வசதிகள் இல்லை. 3 வெண்டிலேட்டர்கள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளன என்றார்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவத்திடம் கேட்டபோது, கடந்த 14 நாட்களுக்கு முன்பு கமலக் கண்ணனின் குழந்தையை அனுமதித்தோம். வெண்டிலேட்டரில் வைத்து கண்காணித்து வந்த நிலையில் குழந்தையின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது என்றார்.