சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான முதல்கட்ட காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இதனால் நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணைய தங்கள் பெயரை பதிவு செய்வதற்காக காஸ் ஏஜென்சிகளில் மக்கள் குவிந்தனர்.
நுகர்வோருக்கு மானிய விலையில், எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கு பதிலாக, சமையல் எரிவாயுவுக்கான மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நுகர்வோர் வாங்கும் எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். இப்படி நேரடி மானியம் பெற காஸ் ஏஜென்சிகளில் நுகர்வோர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், நேரடி மானிய திட்டத்தில் இணைய, காஸ் ஏஜென்சிகளில் பதிவு செய்து கொள்வதற்கான முதல்கட்ட காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இத்திட்டத்தில் இணையாமல் இருந்த நுகர்வோர் பலர் நேற்று காஸ் ஏஜென்சிகளில் குவிய தொடங்கினார்கள். சென்னையில் நுங்கம்பாக்கம், சூளைமேடு, தேனாம்பேட்டை, எம்.கே.பி. நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
அடுத்த கட்டமாக, ஜூலை மாதத்துக்கு முன்பு இணையும் நுகர்வோருக்கு மட்டும் அதற்கு முந்தைய மாதத்தில் காஸ் சிலிண்டர் வாங்கியதற்கான மானிய தொகை மொத்தமாக வழங்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் சேர நுகர்வோர் காஸ் ஏஜென்சியிடம் சென்று மானிய படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இது குறித்த ஐஓசி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நேரடி மானிய திட்டத்தில் சேர விரும்பும் நுகர்வோர், காஸ் ஏஜென்சிகளில் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். படிவத்தில் ஆதார் எண் இருப்பவர்கள் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஆதார் எண் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் வங்கி கணக்கு எண் கட்டாயமாகும். அப்போதுதான் நுகர்வோருக்கு மானிய தொகையை அவரின் வங்கிக் கணக்கில் செலுத்த முடியும். நேரடி மானிய படிவத்தை பூர்த்தி செய்து காஸ் ஏஜென்சியிடமே நுகர்வோர் வழங்கலாம். வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார்.
அடுத்த கட்டமாக, ஜூலை மாதத்துக்கு முன்பு இணையும் நுகர்வோருக்கு மட்டும் அதற்கு முந்தைய மாதத்தில் காஸ் சிலிண்டர் வாங்கியதற்கான மானிய தொகை மொத்தமாக வழங்கப்படும்.