2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பாஜக தொடக்க தின விழா சென்னை தி.நகரிலுள்ள கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. பாஜக கொடியை மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், “பாஜக இதே நாளில் 1980-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் தொடங்கப் பட்டது. காங்கிரஸ் கட்சி ஆங்கி லேயர்களின் வழிகாட்டுதலால் தொடங்கப்பட்டது. எனவே அவர்களால் கட்சி தொடக்க தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாட முடியாது. ஆனால் பாஜக தொண்டர்கள், கட்சியின் தொடக்க தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்” என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக பெரியளவில் வளர்ச்சியடைந்து உள்ளது. 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் பாஜக அங்கம் வகிக்கிற ஆட்சிதான் அமையும்.
முதல்வர் பதவி விலக வேண்டும்
தமிழகத்தில் எல்லா துறை களிலும் ஊழல் மலிந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு மிகப்பெரிய தலை குனிவு ஏற்பட்டுள்ளது. எனவே தார்மீக பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்.
ஜனநாயக படுகொலை
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை சட்டப்பேரவை நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பது அரசின் ஜனநாயக படுகொலைக்கு எடுத்துக்காட்டாகும். பாஜகவை விமர்சிப்பதாக நினைத்து தாலி அகற்றும் போராட்டத்தை கி.வீரமணி அறிவித்துள்ளார். தமிழர்கள் பண்பாட்டை இழிவுப் படுத்தும் இந்த போராட்டத்துக்கு எதிராக தமிழக பெண்கள் திரண்டு வருவார்கள். இதனால் அந்த போராட்டம் சுக்கு நூறாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.