தமிழகம்

மத்திய அமைச்சரை சந்திக்க ராமேசுவரம் மீனவர்கள் இன்று டெல்லி பயணம்: தமிழகம் முழுவதும் 150 பேர் செல்கின்றனர்

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்களின் பிரச் சினைக்குத் தீர்வு காணுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்துவதற்காக ராமேசுவரம் மீனவர்கள் இன்று டெல்லி செல்கின்றனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக -இலங்கை மீனவர்களின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

மேலும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்போம் என அதிபர் சிறிசேனாவும் தெரிவித்த கருத்துகளால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டெல்லியில் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து பாஜகவின் தேசிய பொதுக் குழு உறுப்பினர் முரளிதரன் செய்தியாளரிடம் கூறியதாவது:

பாஜகவின் தமிழ் மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், குப்புராமு, மீனவரணி பொதுச் செயலாளர் ராஜா ஆகியோரது தலைமையில் 150-க்கும் மேற்பட்ட மீனவப் பிரநிதிகள் வரும் 27-ம் தேதி (திங்கள்கிழமை) டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச உள்ளனர்.

இதற்காக ராமேசுவரத்தில் இருந்து மீனவர் பிரநிதி தேவதாஸ் தலைமையில் ஞானசீலன், டைசன், சேசு, எமிரேட் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழு இன்று ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் டெல்லி செல்கின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT