தமிழகம்

பெண்களும் இயக்கும் பேட்டரி ஆட்டோ: திருச்சியில் அறிமுகம்

செய்திப்பிரிவு

பெண்களும் இயக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் குறைந்த விலை கொண்ட ஆட்டோக்களை திருச்சியைச் சேர்ந்த பட்டதாரி அமுதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

பேட்டரியால் இயங்கும் இந்த ஆட்டோவை, பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஓட்டுநருக்கான உரிமம் பெறவேண்டும். இதன் பேட்டரியை 8 மணி நேரம் சார்ஜ் செய்தால், 80 கி.மீ. தூரம் இயக்கலாம். அரை டன் இழுவைத் திறன் கொண்ட இந்த ஆட்டோவில் ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணிக்கலாம். இதன் விலை ரூ.99,000, 12 சதவீதத்தை வணிக வரியாகச் செலுத்தவேண்டும்.

இந்த ஆட்டோவை தயாரித்த அமுதா, புதிய வகை ஆட்டோ குறித்து கூறியதாவது: கணவருடன் அடிக்கடி டெல்லி சென்று வருவேன். அங்கு பேட்டரி ஆட்டோக்கள் அதிகம் இயக்கப்படுவதைப் பார்த்து, நம்மூரிலும் இது போன்று பேட்டரி ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், அவை பெண்களுக்கு பயனுள்ள வகையிலும், குறைந்த விலையில் இருக்கவேண்டும் என தீர்மானித்து, அதற்கேற்ற வகையில் நம்மூர் சாலைக்கேற்ப ஆட்டோவைத் தயாரித்தோம். இதுவரை 4 ஆட்டோக்களைத் தயாரித்து, அவற்றை வணிக ரீதியில் செயல்படுத்திவருகிறோம்.

பெண்கள் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோவில் திருவெறும்பூரில் இருந்து வேங்கூர் மற்றும் கூத்தைப்பார் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்ய நபர் ஒருவருக்கு தற்போது ரூ.10 வசூலித்து வருகிறோம். விரைவில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரை ஆட்டோ இயக்கவுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT