தமிழகம்

கோயம்பேடு – அசோக்நகர் பாதுகாப்பு ஆய்வு நிறைவு: மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் மிட்டல் குழு நாளை ஆலோசனை

செய்திப்பிரிவு

கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆய்வு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து மெட்ரோ மற்றும் தெற்கு ரயில்வே உயரதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆணையர் மிட்டல் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு கட்ட சோதனை ஓட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, இந்தப் பாதையில் பாதுகாப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வு முடிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.

இந்நிலையில், மிட்டல் குழுவினர் இன்று 2-ம் கட்ட ஆய்வை மேற்கொண்டனர். கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை உள்ள ரயில் நிலையங்கள், பாதுகாப்பு அம்சங்கள், ரயில் பாதைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை நேற்று 2-ம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அசோக்நகர் வரை ஆய்வு நிறைவு பெற்றுள்ளது. ரயில் நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டது. அசோக்நகர் முதல் ஆலந்தூர் வரை 2-ம் கட்ட ஆய்வு விரைவில் நடத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரிகளுடன் மிட்டல் தலைமையிலான குழுவினர் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பிறகு தெற்கு ரயில்வே அதிகாரிகளையும் மிட்டல் சந்தித்துப் பேசவுள்ளார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT