திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட் டிருந்த 15 கிலோ தங்கம் இரு தினங்களுக்கு முன் காணாமல்போனது குறித்து சிபிஐ டிஎஸ்பிக்கள் குழு விசாரணை நடத்த உள்ளது. கடத்தல்காரர்களுடன் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த மாதம் காரில் கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கக் கட்டிகளை திருவாரூரில் சுங்கத் துறையினர் கைப்பற்றினர். இவை திருச்சி அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப் பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கட்டிகளை சுங்கத் துறை ஆய் வாளர் சரிபார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள் வந்து பார்த்தபோது, 3.5 கிலோ தங்கக் கட்டிகள் மட்டுமே இருந்தன. 15 கிலோ தங்கக் கட்டிகள் காணாமல்போனது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.3.5 கோடி.
இந்நிலையில் திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் தங்கம் திருடுபோனது தொடர்பாக சென்னையில் உள்ள தென்னிந்திய சுங்கத் துறை முதன்மை ஆணையரும், இணை இயக்குநரும் நேற்று 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தனர்.
இதனிடையே இலங்கை வழியாக தமிழகத்துக்கு தங்கம் கடத்தி வந்தவர் என்று கூறப்படும் வேதாரண்யத்தைச் சேர்ந்த பிரமுகரின் உறவினர்களுடன், திருச்சி சுங்கத் துறை அதிகாரிகள் சிலர் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த பிரமுகரின் உறவினர் களுக்கு தற்போதைய சம்பவத்திலும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ போலீஸார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் திருச்சி சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக யாரையும் சந்திக்க அவர்கள் தயங்கு கின்றனர்.
மேலும், பாதுகாப்புப் பெட்டகத்தில் பார்சல் செய்து வைத்திருந்த தங்கத்தை வைத்திருந்த நிலையில், அந்த பார்சலைப் பிரித்து அதிகளவு தங்கத்தை எடுத்துக்கொண்டு குறைந்த அளவை பார்சலில் வைத்துத் தைத்துள்ளனர். அவ்வாறு மீண்டும் தைப்பதற்கு பயன்படுத்திய நூல் வேறுபடுவதால், அலுவலக ஊழியர்கள் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இதே அலுவலகத்தில் இதேபோன்று வைரம் திருடு போனதாகவும், பின்னர் விசாரணையில் அதை இடம்மாற்றி வைத்துவிட்டதாகக் கூறி அதை மீண்டும் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று தற்போதும் இப்பிரச்சி னையைத் திசை திருப்பக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்குப் பிறகு மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் எனத் தெரிகிறது.