கோடை வெயிலில் பழங்கள் கருத்துப்போவதால் கர்நாடகத்தில் தமிழக வாழைத்தார்களுக்கு வரவேற்பு குறைந்தது. இதனால் நேற்று வத்தலகுண்டு சந்தையில் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந் துள்ளதால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டில் வாழைத்தார் விற்பனைக்கு தனி சந்தை செயல்படுகிறது. இந்த சந்தை தமிழகத்தில் செயல்படும் முக்கிய வாழைத்தார் சந்தைகளில் முதன்மையானது.
இங்கு திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயி கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைவிக்கப்படும் பாரம்பரிய வாழைத்தார்கள் அதிகளவில் இங்கு விற்பனைக்கு வருகின்றன.
இங்கிருந்து சிவகங்கை, ராம நாதபுரம், மதுரை, சென்னை, கோவை மற்றும் கர்நாடகம், கேரளத்துக்கு வாழைத்தார்கள் ஏற்றுமதியாகின்றன. தற்போது வாழைத்தார் விளைச்சல் அதிக மானதால் ரஸ்தாலி, கற்பூரவள்ளி, பூவன் உள்ளிட்டவை வத்தல குண்டு மார்க்கெட்டில் அதிகளவு விற்பனைக்கு வருகின்றன. கர்நாடகம், கேரள சந்தைகளில் முன்புபோல் தமிழக வாழைத் தார்களுக்கு தற்போது வரவேற் பில்லை.
அதனால், வத்தலகுண்டு சந்தையில் நேற்று வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.
இதுகுறித்து வத்தலகுண்டு வாழைத்தார் சந்தை வியாபாரி தாமஸ் கூறியதாவது: ‘‘கோடை வெயிலில் தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழக வாழைத்தார் உடனடியாக கருத்துவிடுகிறது.
அதனால், தமிழக வாழைத்தார் களுக்கு கர்நாடகத்தில் வரவேற்பு இல்லாமல் ஏற்றுமதி குறைந்ததால் கடந்த வாரம்வரை, வத்தலகுண்டு உள்ளிட்ட தமிழக வாழைத்தார் சந்தையில் ஒரு தார் ரூ.50 முதல் ரூ.150 மட்டுமே விலைபோனது.
ஒரு தார் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். தற்போது கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழக கிராமங்களில் பங்குனி திருவிழா, வீட்டு விசேஷங்கள் தொடங்கியும் கர்நாடகத்துக்கு ஏற்றுமதி குறைவால் ஓரளவு மட்டுமே வத்தலகுண்டு சந்தையில் விலை அதிகரித்துள்ளது.
நல்ல விளைச்சல் உள்ள ரஸ்தாலி தார் ரூ.350 வரைக்கும், பூவன் வாழைத்தார் 300 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி 250 ரூபாய்க்கும், நாட்டு வாழைத்தார் 200 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் மிகுதி. விரைவில் காற்று காலம் ஆரம்பிக்க உள்ளதால், வாழைமரங்கள் காற்றில் ஒடிந்து சேதமடையும். அதனால், தற்போது விவசாயிகள் ஒட்டுமொத்தமாக வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதால் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்துள்ளது’’ என்றார்.
வத்தலகுண்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள்.
மவுசு குறைந்த பச்சை வாழை
தாமஸ் மேலும் கூறும்போது, தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் `மோரிஸ்' எனப்படும் பச்சை வாழைப்பழத்தை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்கின்றனர். இந்த வாழைத்தார் அங்கிருந்து பெரும்பாலும் பெங்களூருக்கு மட்டுமே ஏற்றுமதியானதால் கடந்த காலங்களில் இந்த பச்சை வாழைப்பழத்துக்கு கடும் கிராக்கி இருந்தது.
சமீபகாலமாக இந்த வகை பச்சை வாழைப்பழங்கள், மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் அதிகளவு மானிய உதவிகள் வழங்கி விளைவிக்கப்படுவதால் தற்போது தமிழக மோரிஸ் வாழைத்தார் ஏற்றுமதி குறைந்தது.
அதனால், சாகுபடி செய்த பச்சை வாழைப்பழங்களை உள்ளூரிலேயே விற்கக்கூடிய சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதால் ஒரு தார் பச்சை வாழைப்பழம் ரூ.50 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஏற்றுக்கூலிக்கு கட்டுப்படியாகாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதனால், கம்பம் பள்ளத்தாக்கில் பாரம்பரிய பச்சை வாழைப்பழ சாகுபடி பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.