ஜிபிஎஸ் கருவிகள் மூலம் மாநகர பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை செயல்படுத்த உள்ளது. முதலில் 500 பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளது.
சென்னையில் 3,700 பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இவற்றில் அவ்வப்போது புதிய தொழில் நுட்பங்களையும் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தி வருகிறது. தாங்கள் எதிர்பார்க்கும் பஸ் எங்கு வருகிறது என்பதை, காத்திருக்கும் பயணிகள் முன்கூட்டியே அறிந்துகொள்ள பஸ் நிறுத்தங்களில் தொலையுணர்வுக் கருவி (ஜிபிஎஸ்) பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், சில காரணங்களால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதுபோல, அடுத்து வரக்கூடிய நிறுத்தம் பற்றிய தகவலை பஸ்ஸில் காட்டும் ஒளிரும் பலகை திட்டமும் கைவிடப்பட்டது.
இதற்கிடையில், சென்னை மாநகர பஸ்கள் முறையான நேரத்தில், சரியான தடத்தில் இயக்கப்படுகின்றனவா என்பதை அறிந்துகொள்ள பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்று கடந்த 2014-15 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக கிடப்பில் இருந்த இத்திட்டத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்போது தூசிதட்டி எடுத்துள்ளது. இதுபற்றி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாநகர பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. நிறுத்தங்களில் சரிவர நிறுத்தப்படுவது இல்லை என்ற புகார்கள் நீண்ட காலமாக உள்ளன. பஸ்ஸில் பயணிகள் இல்லை என்றால் கடைசி வரை செல்லாமல் பாதியிலேயே திரும்பிவிடுகின்றனர் என்ற புகாரும் உள்ளது.
இதுபோன்ற சேவைக் குறைபாடுகளை தவிர்க்க இத்திட்டம் உதவும். பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகத்தில் இருந்தபடியே அந்த பஸ்களின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கமுடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ் 100 பஸ்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதை 3 நிறுவனங்கள் மூலம் செயல் படுத்திவந்தோம். ஒப்பந்த காலம் முடிந்ததால் அது நிறுத்தப்பட்டது. தற்போது, அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளோம். முதலில் 500 பஸ்களில் ஜிபிஎஸ் வசதி ஏற்படுத்தப்படும். பிறகு, மற்ற பஸ்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழுமத்தின் ஒத்துழைப்போடு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. எந்தெந்த தடத்தில் இயங்கும் பஸ்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்துவது, இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள நிறுவ னத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் நடைமுறைகளை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திட்ட அறிக்கையில் இடம்பெறும். இது இறுதி செய்யப்பட்டதும், ஜிபிஎஸ் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க டெண்டர் கோரப்படும்.
இதைத் தொடர்ந்து, பஸ் டிக்கெட்களை நடத்துநர்கள் விநியோகிக்கும்போதே, தலைமையகத்தின் சர்வரில் இருந்து அதை கண்காணிப்பது, பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகள் அடுத்த பஸ் வரக்கூடிய நேரத்தைப் பார்த்து அறியும் வசதியை ஏற்படுத்துவது ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.