தமிழகம்

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பட்டமேற்படிப்பு மாணவிகள் வேலைநிறுத்தம்: சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவ மனை இயக்குநரை கண்டித்து மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத் துவமனையில் ஒரு பெண் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்புதான் அவ ருக்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த பெண் தன் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். குழந்தை திடீரென இறந்துவிட்டது. குழந்தை இறந்ததற்கு டாக்டர்கள்தான் காரணம் என்று கூறி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து, பணியில் இருந்த பட்ட மேற்படிப்பு மாணவிகளை மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பேபி வசுமதி வரவழைத் தார். அவர்களை வரிசையாக நிறுத்திவைத்து, யார் சிகிச்சை அளித்தது என்று அடையாளம் காட்டுமாறு அந்த பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை டீன் டாக்டர் ஆர்.விமலா மருத்துவ மனைக்கு வந்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், மாணவிகள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்துவருகின்ற னர். இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவிகள் கூறியதாவது:

மருத்துவமனை இயக்குநர் எங்களை குற்றவாளிகளைப்போல வரிசையாக நிற்கவைத்து, பெண்ணின் உறவினரை அழைத்து அடையாளம் காட்டச் சொல்லி அவமானப்படுத்திவிட்டார். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாத இடத்தில் படிக்க வேண்டாம் என்று கூறி, புதுச்சேரியை சேர்ந்த மாணவியை அவரது பெற்றோர் வந்து அழைத்து சென்றுவிட்டனர்.

இந்த மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் 40-க்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் 60-க்கும் அதிகமான பட்ட மேற்படிப்பு மாணவிகள் பணியாற்றுகிறோம். பிரசவம் பார்ப்பது, சிகிச்சை அளிப்பது என அனைத்து பணிகளையும் நாங்கள்தான் செய்கிறோம். எங்களை அவமானப்படுத்திய மருத்துவமனை இயக்குநர் மன்னிப்பு கேட்கவேண்டும். அவரை பணியிட மாற்றம் செய்யவேண்டும். அதுவரை எங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி, டீன் டாக்டர் ஆர்.விமலா பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் இப்பிரச்சினையை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கொண்டுசெல்ல இருக்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT