கூத்துக் கலையை தெருக்கூத்து என்று அழைக்க வேண்டாம் என தருமபுரியில் நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
தருமபுரியில் கூத்துக் கலைஞர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராதாரவி பேசியதாவது:
கூத்துக் கலை தமிழகத்தின் பாரம்பரியம். இது தான் இன்றைய நவீன கலைவடிவங்கள் பல வற்றுக்கும் ஆதாரம். இந்தக் கலையை தெருக்கூத்து என்று கிராமிய கலைஞர்களும், பொது மக்களும் அழைக்கின்றனர். தெரு வில் நடத்தப்படுவதால் கூத்துக் கலையின் முன்பு, முன் ஒட்டாக தெருவும் சேர்ந்து கொண்டது. ஆனால், வெறுமனே கூத்துக் கலை என்று அழைக்கும் போது தான் அதன் கம்பீரம் முழுமையாக வெளிப்படுகிறது.
எனவே, இனி யாரும் தெருக்கூத்து என்று கூற வேண்டாம். கூத்துக் கலை என்று மட்டுமே கூறுங்கள். கூத்து நடத்த சில மாவட்டங்களில் காவல்துறை தடை விதிப்பதாகத் தெரிகிறது. அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சரத்குமார் மூலம் சட்டமன்றத்தில் இதுகுறித்து விரைவில் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு ராதாரவி கூறினார்.
கூட்டத்தில், சங்கத்தின் செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தடை நீக்கியதற்கு நன்றி
இரவு நேரங்களில் கூத்து நடத்த தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை தடை விதித்திருந்தது. அதை தளர்த்தக் கோரி சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதையேற்று காவல்துறையும் கூத்து நடத்த தடை விதிக்கப்படாது என்று தெரிவித்தது. அதற்காக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதனை சந்தித்து ராதாரவி நன்றி கூறினார்.