பவானி சிங் நியமனம் செல்லாது என திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பவானி சிங் நியமனம் செல்லாது என திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தத் தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட நீதிக்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பால் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது" என்றார்.
முன்னதாக, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு தெளிவுபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.