தமிழகம்

திலீப் காந்தி எம்.பி.யின் கருத்துக்கு கண்டனம்: புகையிலையால் தான் 40 சதவீதம் பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது

செய்திப்பிரிவு

புகையிலையால் புற்றுநோய் வருவதில்லை என்று திலீப் காந்தி எம்.பி. கூறிய கருத்துக்கு அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவர் டாக்டர் சாந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘புகையிலையால் தான் 40 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

புகையிலை எச்சரிக்கை விளம்பரம் தொடர்பான நாடாளுமன்ற துணைக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புகையிலை பெட்டிகளில் புற்றுநோய் குறித்த விளம்பரத்தை 80 சதவீதமாக அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது குழுவின் தலைவரான திலீப்குமார் எம்.பி, புகையிலையினால் புற்றுநோய் பாதிப்பு வருவதில்லை என்று கூறியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அவர் இக்கருத்தை கூறியுள்ளார்.

நாட்டில் 40 சதவீதம் பேர் புகையிலையால் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 347 பேர் புகையிலை புற்றுநோயால் இறக்கின்றனர். புற்றுநோய் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கு மரபுவழியின் காரணமாக நோய் வருகிறது.

மத்திய அரசின் சுகாதாரத் துறை, புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு குறித்து பல ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் திலீப்காந்தி கூறிய கருத்து ஏற்புடையதாக இல்லை. அவர் புகையிலை எச்சரிக்கை விளம்பரம் தொடர்பான நாடாளுமன்ற துணைக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அந்த குழுவுக்கு புற்றுநோய் குறித்து நன்கு அறிந்த ஒருவர் தலைவராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT