தமிழகம்

மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம்

செய்திப்பிரிவு

மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் 35 பயணிகள் காயம் அடைந்தனர்.

நெய்வேலியில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு நேற்று காலை தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 35 பயணிகள் இருந்தனர். பஸ்ஸை சாமிவேல் என்பவர் ஓட்டினார். மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வந்தபோது, முன்னே சென்ற ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால், பஸ் டிரைவரும் பிரேக் போட்டுள்ளார். ஆனால், மழையால் சாலையில் தண்ணீரும் சகதியும் தேங்கியிருந்ததால் பிரேக் பிடிக்காமல் வழுக்கியுள் ளது.

இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பை இடித்துத் தள்ளி, மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் முன்பக்கமாக கவிழ்ந்து நின்றது. பஸ் கண்ணாடிகள் உடைந்து சிதறின. உள்ளே இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், அவர்கள் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியைப் பிடித்து தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

விபத்து ஏற்பட்டதும் பஸ்ஸை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் சாமிவேல் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மீனம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT