தமிழகம்

விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காத 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய முயற்சி: ஓசூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

செய்திப்பிரிவு

விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள கொளதாசபுரத்தைச் சேர்ந்தவர் சின்னபில்லப்பா. இவரது மனைவி சொம்பம்மா (70). இவர் கடந்த 5-11-2006 அன்று ஓசூர் பேருந்து நிலையத்தில் கொளதாசபுரத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது பேரிகைக்கு புறப்பட்ட அரசு பேருந்து சொம்பம்மா மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஓசூர் சார்பு நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு, ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

இதே போல் ஓசூர் அடுத்த பெத்தபேலகொண்டபள்ளியைச் சேர்ந்த புத்திரகொண்டான் (55) என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி, ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தில் இருந்து இறங்க முயன்றார்.

அப்போது ஓட்டுநர் திடீரென பேருந்து இயக்கியதில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இவ்வழக்கை விசாரித்த ஓசூர் சார்பு நீதிமன்றம் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

தேன்கனிக்கோட்டை அருகே நடந்த மற்றொரு விபத்து வழக்கில் மோட்டப்பா (70) என்பவருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஓசூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த 3 வெவ்வேறு விபத்துகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் மூன்று அரசு பேருந்துகளையும் ஜப்தி செய்ய, சார்பு நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.

உறுதியளிப்பு

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் நாகராஜ், கோவிந்தன், குமார், வழக்கறிஞர் செல்வி மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஓசூர் பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கு, ஓசூரில் இருந்து பெங்களூர் செல்ல தயாராக நின்றிருந்த 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை நீதிமன்ற ஊழியர்கள் கைவிட்டனர். இதனால் ஓசூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT