தமிழகம்

கட்டுமானப் பணியின்போது பாலம் சரிந்து விபத்து: உதவி செயற்பொறியாளர் உள்பட 15 பேர் காயம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கட்டுமானப் பணியின்போது பாலம் சரிந்து விபத்துக்குள்ளானதில், உதவி செயற்பொறியாளர் உள்பட 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ளது ராமாபுரம் கிராமம். இந்த கிராமத்துக்கு தென்பெண்ணை ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் இந்த கிராமம் துண்டிக்கப்பட்டு விடும். எனவே, தென்பெண்ணை ஆற்றின் நடுவில் பாலம் அமைக்க வேண்டுமென்று கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பொதுப்பணித் துறை சார்பில் ரூ.4 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு நேற்று மேம்பாலத் தூண்கள் அமைத்து, கம்பிகளுக்கு இடையே கான்கிரீட் கலவை போடும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பாலம் சரிந்து விழுந்தது. கட்டுமானப் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக் கத்தினர் அவர்களை மீட்டு, ராயக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT