மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 4 லட்சம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்கள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 4 லட்சம் வழங்கப்படும்.
இவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.