தமிழகம்

திருப்பதி துப்பாக்கிச்சூட்டில் இறந்த கணவரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு

செய்திப்பிரிவு

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று முனியம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்,

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா வேட்டைகிரி பாளையத்தைச் சேர்ந்த எனது கணவர் சசிகுமார் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 7-ம் தேதி திருப்பதி அருகே போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப் பட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதால் அவரைச் சுட்டுக் கொன்றதாக ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர். அது உண்மையல்ல. கடந்த 6-ம் தேதி கூலி வேலைக்காகத்தான் என் கணவர் திருப்பதி சென்றிருந்தார். இந்நிலையில் 8-ம் தேதி நள்ளிரவு ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட எனது கணவரின் உடலை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் என்னிடம் ஒப்ப டைத்தது. என் கணவரின் மரணத் தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத் தைக் கையில் எடுத்துள்ளது. எனவே இந்த சம்பவத்தில் உண் மையில் நடந்ததைக் கண்டுபிடிப் பதற்கு எனது கணவர் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

என்னைப் போலவே இந்த சம்பவத்தில் இறந்த மற்ற 5 பேரின் குடும்பத்தினரும் மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரியுள்ளனர். அவ்வாறு செய்யும்போது அதை வீடியோ பதிவும் செய்ய வேண்டும். மேலும் எங்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நடைபெற்ற வாதங்கள் வருமாறு:

மனுதாரரின் வழக்கறிஞர் கே.பாலு: இறந்த சசிகுமாரின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயம், வெட்டுக் காயம், ரசாயனம் தெளிப்பு போன்றவை உள்ளன. எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது.

நீதிபதி எம்.சத்தியநாராயணன்: முதல் தகவல் அறிக்கை இல்லாமல் மறு பிரேதப் பரிசோதனைக்கு எவ்வாறு உத்தரவிட முடியும்? மேலும் இச்சம்பவம் நடந்த இடம் நமது அதிகார வரம்புக்கு அப்பால் உள்ளது.

அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி: இந்த நீதிமன்றம் உத்தரவிட்டால், மறு பிரேதப் பரிசோதனை செய்ய அரசு தயாராக உள்ளது.

நீதிபதி: அதுபோல எவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட முடியும்? அவ்வாறு உத்தரவிட்டால் அதனை எதிர்த்து ஆந்திர மாநில அரசு வழக்கு தொடர்ந்தால் என்ன வாகும்? பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசே முடிவெ டுத்தால் நீதிமன்றம் அதற்குத் தடையாக இருக்காது.

அட்வகேட் ஜெனரல்: இவ்வழக்கில் அரசின் சட்ட ரீதியான நிலை என்ன என்பதை நாளை (இன்று) தெரிவிக்கிறேன்.

வழக்கறிஞர் பாலு: அதுவரை மனுதாரரின் கணவர் சடலம் உட்பட 6 சடலங்களையும் பாதுகாப் பாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.

நீதிபதி: திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் 6 உடல்களையும் பத்திரமாக வைத்திருக்க உத்தரவிடுகிறேன். நாளை (இன்று) இந்த வழக்கு முதல் வழக்காக எடுத்துக் கொள் ளப்படும்.

இவ்வாறு வாதங்கள் நடைபெற்றன.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாய்மொழியாக முறையீடு செய்தார்.

தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த விவகாரத்தை வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி முன்வைத்தார். ஆந்திரப் பிரதேச செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவினர் 20 தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது குறித்து நீதிபதிகளிடம் அவர் விவரித்தார். போலீ ஸாரின் நடவடிக்கை தொழிலாளர்களின் வாழ்வுரிமை, கண்ணி யத்தை மீறியதாக உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவேண்டும். இது போலி என்கவுன்ட்டர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வாய்மொழியாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி தத்து, ‘முறைப்படி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT