தமிழகம்

இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பாமக: ஜி.கே.மணி பெருமிதம்

செய்திப்பிரிவு

பாமக தான் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

விருதுநகரில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக திமுக, அதிமுக ஆண்டு வருகிறது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படவில்லை. ஊழல், மது பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பாமக வை விரும்புகின்றனர். மக்கள் மத்தியில் பாமக வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக எங்கள் கட்சி இருக்கிறது.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் ஊழல், மது ஒழிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதுவரை எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

தண்ணீர் வசதிக்காக சமீப காலமாக தமிழ்நாட்டில் எந்த அணைக்கட்டுகளும் கட்டப்படவில்லை. கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் கண்மாய், குளங்களை தூர்வார வேண்டும். கேபிள் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT