2 ஆயிரம் ஆண்டு கால நாவிதர்களின் வரலாறு பதிவு செய்யப்படவில்லை என்று, சுற்றுச்சூழல் ஆய்வாளர் கோவை சதாசிவம் பேசினார்.
இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’, பாரதிவாசனின் ‘யாதுமாகி நின்றவன்’ கவிதை நூல்கள் மற்றும் ‘நம் குடும்பம்’ சிற்றிதழின் அறிமுக விழா, பதியம் இலக்கிய அமைப்பு சார்பில் திருப்பூரில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்க செய்திமடல் இதழின் ஆசிரியர் மு.நாகேசுரவன் தலைமை வகித்தார். ஆர்.கிருஷ்ணவேணி வரவேற்றார். நாகர்கோவில் கலை இலக்கிய மன்றப் பொறுப்பாளரும், ஆய்வாளருமான பேராசிரியர் நட.சிவகுமார், கவிஞர் நாணற்காடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து வெளிவரும் ‘நம் குடும்பம்’ மாத சிற்றிதழை, காங்கயம் மக்கள் சிந்தனைப் பேரவை வாசகர் வட்டத் தலைவர் பா.கனகராஜும், ‘யாதுமாகி நின்றவன்’ கவிதை நூலை, கவிஞர் அ.கரீமும் அறிமுகப்படுத்தினர்.
கவிஞர் கலைவாணன் எழுதிய ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ கவிதை நூலை அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் கோவை சதாவசிவம் பேசியது:
இந்தப் புத்தகம், 2 ஆயிரம் ஆண்டு கால நாவிதர்களின் வலியை, அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை சொல்கிறது. பண்டிதன், முண்டிதன், இங்கிதன், சங்கிதன் என்று நால்விதங்களும் தெரிந்தவர்களே நாவிதன்கள். பண்டைய தமிழகத்தின் மருத்துவர்களாகவும், சவர அழகுக் கலைகள், சடங்கு சம்பிரதாயங்கள், இசைக் கலைகளில் தேர்ந்தவர்களாகவும் நாவிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் வரலாறு பதிவு செய்யப்படாமலே போய்விட்டது.
நாடக மற்றும் கலை கூத்துகளின் வாயிலாக, தங்களை சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாவிதர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கோவையைச் சேர்ந்த கவிஞர் ந.முத்து, இ.எம்.எஸ்.கலைவாணன், பாரதிவாசன், ‘நம் குடும்பம்’ இதழின் ஆசிரியர் வர்கீஸ் ஆகியோர் பேசினர். சீலாபாரதி நன்றி கூறினார்.