மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சென்னை மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) பணியாற்றி வந்தவர் ஆண்டவன் (52). கடந்த 20-ம் தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையைக் கடந்தபோது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
ஆண்டவன், 1992-ம் ஆண்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் துணை தகவல் அலுவலராக பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றார். இவரது மனைவி எஸ்.ஜாய், சென்னை அகில இந்திய வானொலியில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இரங்கல்
ஆண்டவனின் மறைவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘ஆண்டவனின் மறைவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. பத்திரிக்கை மற்றும் மக் கள் தொடர்பு சம்பந்தமான அனைத்து பிரிவிலும் வல்லுநராக திகழ்ந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு இது சோகமான தருணம். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர், தலைமை இயக்குநர் (ஊடகம் மற்றும் தொடர்பு) சித்தான்ஷுகர் ஆகியோரும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.