தமிழகம்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: நீதிமன்றத்தில் மனைவி ரகசிய வாக்குமூலம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், அவரது மனைவி, நண்பர் மற்றும் வேளாண் அதிகாரிகள் மூவர் நேற்று சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ந் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்கள் பணி நியமனத்தில் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து தமிழக வேளாண் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு செந்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் விரைவில் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி கடந்த 24-ம் தேதி சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளிதர கண்ணன் முன்னிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவிடம் ரகசிய வாக்குமூலம் பெறப் பட்டது.

நேற்று முத்துக்குமாரசாமியின் மனைவி சரஸ்வதி, வேளாண்மைத் துறையில் பணியாற்றி கடந்த ஓராண்டுக்கு முன் விருப்ப ஓய்வில் சென்ற முத்துக்குமார சாமியின் நண்பர் ராஜகோபால், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தேவேந்திரன், சந்திரசேகரன், பீட்டர் ஐசக் ஆகிய 5 பேரும் இதே நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

பிற்பகல் 2.40 மணிக்கு தொடங்கி மாலை 5.45 மணிவரை இவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT