விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகள் இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே முழு காரணம். இதில் தவறு செய்தவர்களை கண்டறிந்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
விழுப்புரத்தில் நடைபெறும் இரண்டு நாள் (நேற்றும், இன்றும்) பாஸ்போர்ட் சேவை சிறப்பு முகாமை தொடங்கிவைத்த பிறகு அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 25,000 பேர் வரை சென்னைக்கு சென்று விண்ணப்பிக்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்ட மக்களுக்காக பாஸ்போர்ட் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக கூலி தொழிலாளர்களை உயிருடன் பிடித்து விசாரித்து இருந்தால் அவர்களை அழைத்துச் சென்ற ஏஜென்ட், கடத்தல் கும்பல் தலைவர்கள் ஆகியோரை கண்டுபிடித்து இருக்கலாம்.
செம்மரம் கடத்தலில் மிகப்பெரிய மாபியா கும்பல் ஈடுபடுகிறது. இதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்தும் தமிழர்களை சுட்டுக் கொன்றது, ஆந்திர போலீஸார் செய்த மிகப்பெரிய தவறு.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.