தமிழகம்

பார்வையற்றோருக்கு படியளக்கும் பாரதி யுவகேந்திரா- மதுரை மண்ணில் ஒரு மகத்தான சேவை

குள.சண்முகசுந்தரம்

‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ - மகாகவி பாரதியாரின் இந்த வைர வரிகளுக்கு பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறது மதுரையில் உள்ள ’பாரதி யுவகேந்திரா’.

பார்வையற்ற 250 குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியும் ஆண்டு தவறாமல் புதுத்துணியும் எடுத்துக் கொடுத்து அந்த குடும்பங்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறது பாரதி யுவகேந்திரா.

மாணவர்களுக்கு விருது

இந்தச் சேவையை தொடங்கியதன் நோக்கம் குறித்து விளக்குகிறார் பாரதி யுவகேந்திராவின் நிறுவனர் நெல்லை பாலு. ’’கல்லூரியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் அதிகமாக பங்கெடுப்பேன். 1982-ல் அகில இந்திய அளவிலான பேச்சுப் போட்டியில் குடியரசுத் தலைவர் விருதும் பெற்றேன். அப்போது என்னை எல்லோரும் பாராட்டியது போல் நாமும் இளைஞர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பாரதி யுவகேந்திராவை தொடங்கினேன். எங்கள் அமைப்பின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் ’யுவஸ்ரீ கலாபாரதி’ விருதுகளை கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.

இந்தப் பணியை செய்துகொண் டிருக்கும்போதே எங்களின் கவனம் பார்வையற்றோர் பக்கம் திரும்பியது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையற்றவர்கள் கொத்துக் கொத்தாய் வசிக்கிறார்கள். மதுரை மாநகரம்தான் இவர்களுக்கான பிழைப்புக் களம். இவர்களில் பலர் பிச்சையெடுக்கிறார்கள்.

எஸ்.டி.டி. பூத், வயர் சேர் பின்னுதல் உள்ளிட்ட தொழில்களுக்கு இப்போது வேலையில்லாமல் போய்விட்டதால் பிழைப்புக்கு வழி தெரியாமல், பார்வையற்ற அப்பாவி ஜீவன்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம்.

டோனர்கள் மூலம் நிதி

அதன் தொடக்கமாக 25 பார்வை யற்ற குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசியை வழங்குவது என தீர்மானித்தோம். இதற்கும் ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவதற்குமான நிதியை டோனர்கள் மூலமாக பெற்று செய்ய ஆரம்பித்தோம். சேவை உள்ளம் கொண்ட பலரும் உதவ முன்வந்தார்கள். அதனால், 25 குடும்பங்கள் என்று இருந்ததை 250 குடும்பங்களாக உயர்த்தி அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசியை மாதந்தோறும் வழங்கி வருகிறோம்.

லேப்டாப் உதவி

இதுமட்டுமில்லாது, பார்வையற்றோர் குடும்பங்களில் உள்ள குழந்தை களின் படிப்புக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்துவருகிறோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மாற்றுத் திறனாளி ஒருவர் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். அவருக்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்யலாமே என்று அவரை அணுகினேன். ஆனால் அவரோ, ‘கஷ்டப்பட்டு எனது மகளை இன்ஜினீயரிங் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு காலுக்கு செலவு செய்யும் பணத்தில் எனது மகளுக்கு லேப்டாப் வாங்கிக் கொடுங்கள்’ என்று சொன்னார்.

எனது நண்பர் ஒருவரிடம் இந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். அடுத்தநாளே அவர் நாற்பதாயிரம் ரூபாயில் லேப் டாப் வாங்கிக் கொண்டுவந்து அந்தத் தகப்பனிடம் கொடுத்தார். இதேபோல், கோபி கண்ணன் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒன்றே கால் லட்சத்தை வசூல் பண்ணிக் கொடுத்தோம். அந்தச் சிறுவன் 4 தங்கப் பதக்கங்களோடு வெளிநாட்டிலிருந்து திரும்பினான்.

இப்படி எங்களால் ஆன சிறுசிறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள் இவைகளுக்கு எல்லாம் ஆடம்பர பார்ட்டிகளுக்கு செலவு செய்பவர்கள், அந்தப் பணத்தை இது போன்ற இயலாத மக்களுக்கு செலவு செய்தால் எத்தனையோ பேரை கைதூக்கிவிட முடியுமே’’ என்று சிந்திக்க வைக்கிறார் நெல்லை பாலு. தொடர்புக்கு 9442630815.

SCROLL FOR NEXT