சென்னை எழும்பூர் – தாம்பரம் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கான செல்போன் ஆப் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியிலிருந்து காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
புறநகர் மின்சார ரயில் டிக்கெட்டை பெறுவதற்கு பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க புதிய திட்டத்தை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக “யுடிஎஸ்” எனப்படும் செல்போன் அப்ளிகேஷனை ‘கூகிள் பிளே’ அல்லது ‘விண்டோஸ் ஸ்டோர்’ ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி குறுகிய தூர மின்சார ரயில் பயணத்துக்கு வேண்டிய டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு பயணம் செய்யலாம். அதாவது எழும்பூரிலிருந்து மீனம்பாக்கம் செல்லவோ, கிண்டியிலிருந்து மாம்பலம் வரவோ இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
பயணிகள் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவு செய்தால் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பிவைக்கப்படும். இதனடிப்படையில் உள் நுழைந்து பெயர், அடையாள அட்டை விவரம், ஆன்லைன் பணப்பரிமாற்றம், எந்த மார்க்கத்தில் பயணிக்க விரும்புகிறார்களோ அதற்கான விவரம் உள்ளிட்ட தகவல்களை அளித்து இச்சேவையை பயன்படுத்தலாம்.
சென்னை எழும்பூர் -தாம்பரம் மார்க்கத்தில் இத்திட்டம் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று நடந்தது. இந்தத் திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியிலிருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:
பயணிகள் நலனையும் வசதியையும் கணக்கில் கொண்டு இந்தியன் ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அதனை தானியங்கி டிக்கெட் வெண்டிங் இயந்திரத்தில் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் அடுத்தகட்டமாக காகிதமில்லாமல் மொபைல் போன்களின் மூலமே டிக்கெட்டை பெறுவதற்கான திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. பயணிகள், ரயில்வே ஊழியர்கள் இந்த திட்டத்தால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்றார்.
இந்த திட்டம் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் அகர்வால் நிருபர்களிடம் கூறும்போது, “மின்சார ரயில் டிக்கெட்டுகளை பெற பயணிகள் இனி வரிசையில் நிற்க தேவையில்லை. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் ஆப்பின் மூலம் அவர்களே பெற்றுக்கொள்ளலாம். இதில் உள்ள நிறை குறைகளை ஆய்வு செய்து இதனை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.கே.ரெங்கராஜன் எம்.பி., “இந்த புதிய திட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் ஊழியர்கள் நலனிலும் இந்தியன் ரயில்வே கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.