திருச்சி சுங்கத் துறை அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து 15 கிலோ தங்கக் கட்டிகள் மாயமான சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று விசாரணையைத் தொடங்கினர்.
கடந்த மாதம் காரில் கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கக் கட்டிகளை திருவாரூரில் சுங்கத் துறையினர் கைப்பற்றினர். இவை திருச்சி அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட் டிருந்தன. இது தொடர்பான வழக்கு விசாரணை திருவாரூர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 17-ம் தேதி, பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கட்டிகளை சுங்கத் துறை ஆய்வாளர் சரிபார்த்தபோது, தங்கக் கட்டிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து உயரதிகாரிகள் பார்த்தபோது, 3.5 கிலோ தங்கக் கட்டிகள் மட்டுமே இருந்ததும், 15 கிலோ தங்கக் கட்டிகள் காணாமல்போனதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிபிஐ டிஎஸ்பி தலைமையிலான போலீஸார், நேற்று திருச்சி சுங்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக திருச்சி சுங்கத் துறை ஆணையர் மற்றும் உதவி ஆணையரிடமும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முகமது பாரூக்கிடமும் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. ஆய்வாளர் செந்தில்குமார் நீண்ட விடுப்பில் உள்ளதால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் தங்கக் கட்டிகள் மாயம்?
சிபிஐ விசாரணை தற்போது தொடங்கியுள்ள நிலையில், 15 கிலோவுக்கு மேல் தங்கக் கட்டிகள் மாயமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையின் முடிவில்தான் எத்தனை கிலோ தங்கக் கட்டிகள் மாயமாகி உள்ளது என்பதும், இந்த முறைகேட்டில் தொடர் புடையவர்கள் யார் என்பதும் தெரியவரும்.