தமிழகம்

SIR | மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 23,50,157 பேர் இடம் பெற்றுள்ளனர். முந்தைய பட்டியலில் இருந்த 3 லட்சத்து 80 ஆயிரத்து 474 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன்குமார் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் ஆண்கள் 11,58,601 பேர், பெண்கள் 12,01,319 பேர், மூன்றாம் பாலினத்தவர் 237 பேர் என மொத்தம் 23,50,157 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 13,44,402 பேர், பெண்கள் 13,95,938 பேர், மூன்றாம் பாலினத்தவர் 291 பேர் என மொத்தம் 27,40,631 பேர் இடம் பெற்றிருந்தனர்.

முகவரியில் இல்லாத 38,036 பேர், வீடு மாறியவர்கள் 2,36,068 பேர், இறந்தவர்கள் 94,432 பேர், இரட்டைப்பதிவு உள்ளவர்கள் 11,336 பேர், மற்ற காரணங்களால் 602 பேர் என மொத்தம் 3,80,474 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 13.88 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஏற்கெனவே வாக்குச்சாவடி மையங்கள் 2,852 இருந்தன. தற்போது 3,076 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வரும் ஜன. 18-ம் தேதி வரை படிவம் 6-ஐ பூர்த்தி செய்து பெயரை சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் - 1.17 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் 27.10.2025-ன்படி 599183 ஆண் வாக்காளர்கள், 609441 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1208690 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் இறந்தவர்கள் 51439 பேர், இரட்டைப் பதிவு 9424 பேர், முகவரியில் இல்லாதவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 56501 என மொத்தம் 1,17,364 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்படி நான்கு தொதிகளிலும் 541332 ஆண் வாக்காளர்கள், 549939 பெண் வாக்காளர்கள், 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,91,326 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சிவகங்கை - 1.50 லட்சம் பேர் நீக்கம்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அவர் பேசியது: அக்.27-ம் தேதி நிலவரப்படி சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 12,29,933 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ.4 முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், காரைக்குடி தொகுதியில் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், இரண்டுக்கு மேற்பட்ட பதிவு, கண்டறிய இயலாதவை என 32,900 பேர் நீக்கப்பட்டனர். அதேபோல், திருப்பத்தூரில் 41,309 பேர், சிவகங்கையில் 39,311 பேர், மானாமதுரையில் 37,308 பேர் என மொத்தம் 1,50,828 பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது காரைக்குடி தொகுதியில் 2,93,489 பேர், திருப்பத்தூரில் 2,65,474 பேர், சிவகங்கை தொகுதியில் 2,69,088 பேர், மானாமதுரையில் 2,51,054 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 10,79,105 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக 154 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,518 ஆக உயர்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT