தமிழகம்

இலவச சேனல்களுக்கு கட்டணம் விதிப்பதா? - அரசு கேபிள் நிறுவனத்துக்கு விஜயகாந்த் கண்டனம்

செய்திப்பிரிவு

இலவச சேனல்கள் மாதம் ரூ.70 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கேபிள் டிவி தொழிலில் நிலவிய ஏகபோக தனியார் ஆதிக்கத்தை எதிர்த்து உருவானது அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன். ஆனால், அதிகாரிகளின் தவறான வழி காட்டுதல் மற்றும் அரசின் அழுத் தத்தால் கேபிள் டிவி தொழி லையே அழிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

கேபிள் டிவியில் கட்டணச் சேனல்கள், இலவச சேனல்கள் என இரு பிரிவுகள் உள்ளன. மக்களிடம் இருந்து மாதந்தோறும் ஒரு இணைப்புக்கு ரூ.110 வீதம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை கட்டணச் சேனல்கள் விகிதாச்சார அடிப்படையில் பங்கிட்டுக் கொள்கின்றன. அதோடு இந்தச் சேனல்களுக்கு ஒளிபரப்பு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சேனல்கள் தங்களது ஒளிபரப்பை இலவசமாகவே வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இலவச சேனல்கள் அனைத்தும் மாதந் தோறும் ரூ.70 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லை யெனில் ஒளிபரப்ப இயலாது என அரசு கேபிள் நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. இதனால் இந்த சேனல்களில் பணிபுரியும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவன சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT