தமிழகம்

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற காரணம் என்ன? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

செய்திப்பிரிவு

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை திடீரென இடமாற்றம் செய்ததற்கான காரணம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வகேலா, திடீரென வேறொரு சிறிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். மதிப்புமிக்க நீதித் துறை, நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், மாறுதல்கள் செய்வதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின்மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடம் இருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன்.

ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி கடந்த பிப்ரவரி முதல் காலியாக இருக்கும் நிலையில் திடீரென ஏப்ரல் 12-ம் தேதி வகேலா மாறுதல் செய்யப்பட்டது ஏன்? தேசிய நீதித் துறை நியமன கமிஷனுக்கான அறிவிக்கை வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த மாறுதலை செய்ய வேண்டிய காரணம் என்ன?

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர உருவாக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு ஏப்ரல் 15-ம் தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பு ஏன் இந்த மாறுதல் செய்யப்பட்டது?

சந்தேகம் தவறல்ல

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டதை நாம் இந்த நேரத்தில் மறந்துவிட முடியாது. எனவே, இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதில் தவறு இருக்க முடியுமா?

நீதித் துறையின் நேர்மை, சுதந்திரம், நடுநிலை மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் வெளிப்படையான நிர்வாகத்துக்கான கோரிக்கை வலுத்துவரும் காலகட்டம் இது. அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவரும் வேளையில், நீதித் துறையின் முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத் தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என சில மூத்த வழக்கறி ஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும்போது என்ன பதில் கூறுவது?

ஜனநாயக நாட்டில் அனைத்துக் கும் மேலானது நீதித்துறைதான். ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதும் நீதித்துறையே. அப்படிப்பட்ட உயிர் நாடியான அந்தத் துறையின் மீதே இதுவரை இல்லாத அளவுக்கு விமர்சனங்கள் வருவது நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்துக்கும், வாய்மையே வெல்லும் என நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா?

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT