தமிழகம்

பேசின்பிரிட்ஜ் - சென்ட்ரல் ரயில் பாதை பணிகள் தாமதம்: மக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6 - வது ரயில் பாதைகள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்களை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரயில்கள் சரியான நேரத்துக்கு சென்னையை நோக்கி வந்தாலும், பேசின்பிரிட்ஜில் இருந்து சென்ட்ரல் வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இந்த காலதாமதத்தைத் தவிர்க்க, பேசின்பரிட்ஜ் - சென்ட்ரல் இடையே ரூ.29 கோடி செலவில் 5 மற்றும் 6-வதாக புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரயில்வே துறை தெரிவித்திருந்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு கடந்த 2 ரயில்வே பட்ஜெட்களில் தலா ரூ.1 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப் படுகிறார்கள். இந்த ரயில் பாதை களை விரைவாக அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, “சென்னைக்கு வரும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பேசின்பிரிட்ஜ் அருகே சுமார் 20 நிமிடங்கள் வரை நிறுத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். இது ரயில் பயணிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சென்னை மக்களின் பிரச்சினை யாக உள்ளது. எனவே, பேசின்பரிட்ஜ் - சென்ட்ரல் இடையே 5 மற்றும் 6வது புதிய ரயில்பாதைகள் அமைக்கும் பணிகளை விரிவுபடுத்த தமிழக எம்பிக்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT