நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்திருந்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மோடியுடன் நல்லுறவு தொடர வேண்டும் எனவே விரும்புவார் என அதிமுக வட்டாரம் தெரிவிக்கின்றது.
அரசியல் நிலவரங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அவர், வெகுவிரைவில் மோடியுடன் ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே அதிருப்தி:
பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜப்கசே அழைக்கப்பட்டது தான் ஜெயலலிதாவை அதிருப்தி அடைய வைத்த ஒரே நிகழ்வு என அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
ராஜபக்சே பங்கேற்றதாலேயே, மோடி பதவியேற்பு விழாவை முதல்வர் புறக்கணிக்க வேண்டியதாயிற்று என மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரதமரில் ஒரு நண்பர்:
மக்களவை தேர்தல் முடிவுகள் மத்திய அரசில் அதிமுகவுக்கு ஒரு முக்கிய அந்தஸ்து அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், அது நடக்காத போது, பிரதமர் ஒரு நல்ல நண்பராக இருப்பதில் ஆறுதல் கொண்டோம். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன் என மோடி தனிப்பட்ட முறையில் அம்மாவிடம் (முதல்வர் ஜெயலலிதாவிடம்) வாக்குறுதி அளித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது அனைத்து நல்லெண்ணங்களையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிட்டதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வருத்தம் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சினையில், அதிமுக விருப்பதிற்கு மாறாக பாஜக முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் மோடி - ஜெயலலிதா உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.
எதிர்கால திட்டம்:
மே 22-ல் ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மிதமான போக்கையே கடைபிடித்திருப்பது எதிர்காலத்தில் மோடியுடன் நட்புறவை தொடர வேண்டும் என்ற அவரது விருப்பத்தையே உணர்த்துவதாக கூறப்படுகிறது.