மாயமான ஜவுளி வியாபாரியை கண்டுபிடிக்கக் கோரி அவரது மனைவி, தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாஜ் தெருவில் வசிப்பவர் பக்தாராம் (32). ஜவுளி மொத்த வியாபாரம் செய்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். நீலாதேவி (26) என்ற மனைவி, 4 வயது மகன், 7 மாத பெண் குழந்தை உள்ளனர். தங்கையின் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் கடந்த 13-ம் தேதி இரவு ரயிலில் புறப்பட்டு ராஜஸ்தான் செல்ல பக்தாராம் திட்டமிட்டிருந்தார்.
ஊருக்குச் செல்லும் முன்பு சில பொருட்கள் வாங்குவதற்காக அன்று காலை பாரிமுனைக்கு வந்துள்ளார். அவ்வப்போது மனைவியுடன் செல்போனில் பேசினார். எல்லா பொருட்களும் வாங்கிவிட்டதாகவும் வீட்டுக்கு புறப்படுவதாகவும் சவுகார்பேட்டை பந்தர் தெருவில் இருந்து மாலை 6.30 மணி அளவில் கூறியிருக்கிறார்.
இரவு 8 மணி கடந்த பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், நீலாதேவி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதற்றம் அடைந்த அவர், கணவனை காணவில்லை என்று பொன்னேரி மற்றும் பூக்கடை காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது 2 குழந்தைகளுடன் தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு நீலாதேவி வந்தார். மாயமான கணவனை கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். இதுசம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.