தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் சுமார் நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவலஞ்சுழி, சுந்தரப்பெருமாள் கோவில், சுவாமிமலை, மாங்குடி, வலையப்பேட்டை, பட்டீஸ்வரம், அண்ணலக்ரஹாரம், சோழன் மாளிகை, தாராசுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 600 ஏக்கரில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் பழத்துக்காகவும், இலைகளுக்காகவும் வாழை சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டில் பயிரிடப்பட்ட இந்த வாழை மரங்களிலிருந்து இன்னும் 2 மாதங்களில் வாழைத் தார்கள் அறுவடை செய்யப்பட இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளிக் காற்று டன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக சுவாமிமலை, வலைப் பேட்டை, மாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கரில் வாழை மரங்கள், தார்களுடன் முறிந்து விழுந்தன. சேதமடைந்த வாழைகளை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல திருச்சி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் லால்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தன.