கோவையில் பாமக மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி எப்படி வெற்றி பெற்றதோ, அதே போல பாமக தலைமையில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்காக பொதுமக்களை சந்தித்து எங்களது கொள்கைகள் குறித்து விளக்கி வருகிறோம். குறிப்பாக, மது, ஊழல் ஒழிப்பு ஆகிய இரு முக்கியமான கொள்கை களை வலியுறுத்தி வருகிறோம். நான் முதல்வராக தேர்வு செய்யப் பட்டவுடன், போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பாகத்தான் இருக்கும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.
தமிழக அரசு கடனாக மட்டும் ரூ.4.15 லட்சம் கோடியை வைத்துள்ளது. ரூ.35 ஆயிரம் கோடியை வட்டியாக செலுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்கள் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.
எங்களது தலைமையை ஏற்று எந்தக் கட்சி வந்தாலும் அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனது நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்க வேண்டும்.
இதனை வலியுறுத்துவதற்கு காரணம், அருண் ஜேட்லி - ஜெயலலிதா சந்திப்புக்கு பின்னர் அக் கட்சியின் மாநிலத் தலைமை மவுனம் சாதித்து வருகிறது. இதேபோல், வாசன், விஜயகாந்த் ஆகியோரும் தங்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.