தமிழகம்

10 ஆண்டு கால கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கல்வி மேம்பாட்டு அமைப்பு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தொடர்ந்து 10 ஆண்டுகள் இயங்கி வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கல்வி மேம்பாட்டு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தென்னிந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்விச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய கல்வி மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினர்.

பின்னர் நிருபர்களிடம் இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத் தலைவரும் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:

நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டு கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய கொள்கை முடிவுகளை தயாரித்துள்ளோம். பள்ளிக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆகியவை குறித்து தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

நமது பள்ளிக்கல்வி, உலகத் தரத்துடன் ஒப்பிடும்படியாக இல்லை. பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களால் ஐஐடி, விஐடி உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஒரு பள்ளி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற விரும்பினால் அரசு தாராளமாக அனுமதி அளிக்க வேண்டும். சமச்சீர் கல்வியை விரும்பும் பள்ளிகள் அதைத் தொடரலாம்.

எந்தக் கல்வி வேண்டும், எந்த மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோரும் தீர்மானிக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். கல்வி வளர்ச்சி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 முறையாவது கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஒற்றைச்சாளர முறையை கொண்டுவர வேண்டும். அனைத்தும் வெளிப்படையாக இருந்தால் லஞ்சம், ஊழலுக்கு இடமே இருக்காது. மாணவர்களிடம் அளவுக்கு அதிகமாக கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டிய தேவையும் எழாது.

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ஐ புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு வாபஸ் பெற வேண்டும்.

முந்தைய காங்கிரஸ் அரசு கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் எடுத்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிரானவையாக உள்ளன.

எங்கள் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சரிடம் இன்னும் 2 வாரத்தில் நேரில் சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு ஜி.விஸ்வநாதன் கூறினார்.

இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் மற்றொரு தலைவரான எச்.சதுர்வேதி கூறுகையில், “கொல்கத்தா, சண்டீகர், டெல்லி ஆகிய நகரங்களிலும் இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும்.

இந்தியாவில் ஆராய்ச்சிக்கு அரசுகள் ஒதுக்கும் நிதி போதுமானதாக அல்ல. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ஆய்வு நிதி வழங்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT